Friday 2 March 2012

மனிதர்கள் எத்தனை விதம்!

நமது அன்றாட வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்தித்து வருகிறோம். ஒவ்வொருவரும் ஒரு விதம். சிலர் முன்கோபவாதி, சிலர் வெகுளி, சிலர் கள்ளத்தனம் உள்ளவர், சிலர் மிகவும் நல்லவர், சிலர் வஞ்சனை உள்ளவர், சிலர் சுயநலவாதி இப்படி எத்தனையோ.

என்னை பொறுத்தவரையில் எவரோடு வேண்டும் என்றாலும் நாம் பழகிவிடலாம். ஆனால் இந்த சுயநலம் உள்ளவரோடு மட்டும் நம்மால் நட்பு பாராட்ட முடியாது. எனது இந்த 30 ஆண்டு கால வாழ்க்கையில் நான் சந்தித்த ஒரு சில சுயநலம் உள்ள மக்களை பற்றி இங்கே பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

1) ஐந்து /ஆறு வருடங்களுக்கு முன்பு வடஇந்தியாவில் வேலை பார்க்க நேர்ந்தது. அப்பொழுது எங்கள் அலுவலக தமிழ் நண்பர்கள் ஒன்றாக ஒரு வீட்டில் வாடகைக்கு குடி இருந்தோம். அந்த வீட்டில் எனக்கு முன்பாக 2 தமிழ் நண்பர்கள் எனது அலுவலக நண்பர்களுடன் குடி இருந்தனர். அப்போது நடந்த சம்பவம் இது. அந்த ஐந்து பேரில் இருவர் விடுப்பில் ஒரு 15 நாட்கள் தமிழகம் வந்தனர். ஆனாலும் அந்த இருவர் தங்கள் மாத வீட்டு வாடகையில் தங்கள் ஒரு மாத பங்கு'ஐ செலுத்தினர்.  சில மாதங்கள் கழித்து மற்ற இருவர் தீபாவளி திருநாளுக்காக தமிழகம் சென்றனர். அவர்கள் வந்த பிறகு, தாங்கள் 15 நாட்கள் தான் வீட்டில் தங்கியதால் பாதி மாத வாடகை மட்டும் செலுத்துவதாக கூறினர்.  முன்பு ஊருக்கு சென்ற இரண்டு பேரிடம் மட்டும் முழுவதுமாக வாடகை பங்கை வாங்கியவர்கள், தாங்கள் ஊருக்கு சென்ற மாதத்தில் முழு வாடகை செலுத்த மாட்டோம்  என்று பிரச்சனை செய்தனர். சட்டையை கோர்த்து கொண்டு சண்டை பிடிப்பதுவும் நடந்தது. பார்த்துகொளுங்கள் தங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவர்களுக்கு ஒரு நியாயம்.

2) அடுத்ததாக வரும் நபரும் எனது நண்பராக வாய்த்தது தான் எனது துர்ரதிஷ்டம். இப்படி பட்ட ஒரு கஞ்சனையோ ஒரு சுயநலம் உள்ள மனிதரையோ நான் இது வரையில் சந்தித்தது இல்லை. இவர் ஒரு முறை நண்பர்களுடன் சுற்றுலா சென்றார். அங்கே ஒரு முறை ஹோட்டலில்  சாப்பிடும் போது "நாம் சாப்பிடும் சாப்பாடு கணக்கு பொது" என்று கூறிவிட்டு தலைவர் பிரியாணி, சிக்கன், முட்டை, மட்டன் என்று வெளுத்து கட்டிவிட்டார். இதில் எங்கே பிரச்சனை வந்ததோ தெரியவில்லை. அடுத்தநாள் "அவங்க அவங்க சாபிடுரதுக்கு அவங்களே பில் கட்டுங்க" என்று கூறி அப்பொழுது அவர் வெறும் இரண்டு தோசை மட்டும் எடுத்து கொண்டார். பார்த்துகொள்ளுங்கள் அடுத்தவர் காசு என்று வந்துவிட்டால் எவ்வளவு வேண்டும் என்றாலும் சாப்பிடுவது, தனது காசு என்று வந்துவிட்டால் சிக்கனமாக இருப்பது. இவரை பற்றி இன்னொரு சுவையான செய்தி. தனது தந்தைக்கு கொடுத்த பணத்தை (சில ''கரங்கள்), வட்டியுடன் திரும்ப வாங்கியவர். பெற்ற தந்தைக்கே இந்த நிலைமை என்றால் நண்பர்கள் எம்மாத்திரம்.

இப்படி  சில சுயநலமிகளை பார்க்க நேர்ந்த எனக்கு சில உத்தமர்கள் பற்றிய செய்திகளும் எனது நண்பர்கள் மூலமாக கிடைத்தது.  இதோ அந்த சம்பவம்...

ஒரு தென்னிந்திய குடும்பத்தில் அண்ணன் தம்பி என இருவர். இதில் தம்பி வெளி நாட்டில் உள்ளார். அண்ணன் தென்னிந்தியாவில். இருவருக்கும் திருமணம் முடிந்து குடும்பத்துடன் உள்ளனர். ஆனால் அண்ணனுக்கு 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. தம்பிக்கோ இரண்டு வாரிசு. இதனால் அண்ணனின் வேதனையை அறிந்த தம்பியும் அவரது மனைவியும் மூன்றாவதாக ஒரு குழந்தை தனது அண்ணனுக்காகவே பெற்றடுத்து  அவரிடம் அந்த குழந்தை வளர ஒப்படைத்து உள்ளனர். இப்பொழுது அந்த குழந்தை அண்ணனிடம் தென்னிந்தியாவில் வளருகிறது. குழந்தையை பிரிந்த சோகம் பெற்ற தாய்க்கும் தந்தைக்கும் இருந்தாலும், அண்ணனுக்காக விட்டுக்கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். இந்த சம்பவத்தை எனக்கு தெரிந்தவர்களிடம் கூறும் போது எல்லாம் எனக்கு தழு தழுகிறது மனது. கண்ணில் நீர் முடிக்கொண்டு வருகிறது. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருப்பது அந்த பெற்ற தாய் பற்றி தான். தம்பியாவது அண்ணன் என்ற ஒரு பாசத்தில் குழந்தையை கொடுத்துள்ளார். ஆனால் அந்த தாய் எவ்வளவு அன்பு தனது கணவரிடம் வைத்திருந்தால் அவரின் சொல் கேட்டு 10 மாதம் சிரமப்பட்டு பெற்ற குழந்தையை கொடுத்திருப்பாள்.

இப்படியும் சில நல்லவர்கள் வாழ்வதால் தான் இந்த பூமி இன்னும் சுற்றிக்கொண்டு உள்ளது.

சமர்ப்பணம்: வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம், எனது பதிவு எழுதகாரணமாய் இருப்பவர்களுக்கு அந்த பதிவு சமர்ப்பணம் செய்வது தற்பொழுது எனது பழக்கம். சில பதிவுகள் அந்த நிமிடம் எனக்கு உள்ள உணர்ச்சியில் சமர்ப்பணம் செய்வது உண்டு. இந்த சம்பவம் நான் நினைக்கும் பொழுது எல்லாம் என் மனதை நெகிழச்செய்தது. அதனால் இந்தப்பதிவு எனது உளமார அந்த "புண்ணியவதிக்கு" சமர்ப்பணம்.தாயே நீ என்றும் நலமோடு வாழ அனைவரையும் ஒன்று சேர்த்து அனைவர் சார்பிலும் அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

மன்னிப்பு: இந்த பதிவில் கூறி உள்ள நபர்கள் இதை படிக்க நேர்ந்து உங்கள் மனது பாதிப்பு அடைந்தாலோ / உங்கள் அனுமதி இல்லாமல் இந்த சம்பவங்களை இங்கே பதிந்ததற்கும் என்னை மன்னித்து அருள வேண்டுகிறேன். எனது மனதில் தோன்றிய வருத்தத்தை தான் பதிவு செய்துள்லேனே தவிர யாரையும் புண்படுத்தும் நோக்கத்தோடு இந்த வலைப்பதிவை ஏற்றவில்லை என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறேன்.