Wednesday 15 February 2012

ஆம்பரவனேஸ்வரர்


திருப்திகரமாக பெருமாளை பார்த்தாகிவிட்டது. அடுத்ததாக சிவ பெருமானை தானே தரிசித்தாக வேண்டும். எங்களின் அடுத்த பயணம் நன்னிலம் நோக்கி. குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் சாலையில் நான்கு ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமம் கூகூர். அங்கே பழைய கறுப்பு வெள்ளை படத்தில் வரும் பாழடைந்த கோவில் போல இருக்கிறது இந்த கோவில். அந்த கோபுரத்தின் மீது செடி ஒரு மரம் போல வளர்ந்து உள்ளது. இதன் பழமையை பற்றி விசாரித்தால், இக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர்.
இக்கோவிலில் உள்ள சிவனின் பெயர் தான் இந்த ஆம்பரவனேஸ்வரர். சிவனை தரிசிப்பதற்காக இந்த காட்டில் துர்வாச முனிவர் வெறும் மாம்பழத்தை உண்டு தவம் இருந்தார் எனவும், அதனால் தான் இப்பெயர் வந்தது என்று அந்த அர்ச்சகர் கூறினார் (அவர் கூறிய சில தமிழ் வார்த்தைகளை நான் மறந்துவிட்டேன். இந்த பெயரில் வானம் என்பது காடு என்று மட்டும் எனக்கு தெரியும். இதன் முழு பெயர் காரணம் யாருக்கேனும் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளவும்). நாங்கள் சென்ற போது மிகவும் மோசமாக பாழடைந்த அந்த கோவிலில் புனரமைப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தது. நாங்கள் கோவில் பிரகாரத்தை பார்ப்பதற்கு கூட பாலம் போய் அமைக்கப்பட்டு இருந்த பாறைகளின் மீது நடந்து தான் செல்ல வேண்டி இருந்தது. ஒருவர் வெளியில் வரும்பொழுது அடுத்தவர் செல்ல முடியாமல் இருந்தது. கிட்டதிட்ட முக்கால் வாசி கோவில் இடிந்த நிலையில் இருந்தது. கோவிலின் உள்ளே அதனை கற்கள் சுற்றிலும் குவித்துவைக்கப்பட்டு இருந்தது. அதனூடே பாம்புகள் இருந்தாலும் யாருக்கும் தெரியாது. அப்படி இருந்தும் அந்த கோவிலின் அர்ச்சகர் கடமை சிரத்தை மன்னிக்கவும் பக்தி சிரத்தையோடு எங்களுக்கு கோவிலின் அருமை பெருமைகைளை கூறிக்கொண்டு இருந்தார். ஒவ்வொரு சிறு சன்னதிகளுக்கும் எங்களை கூடிக்கொண்டு இருந்தார். எனது மனதுகுள்ளே பாம்புகள் பற்றிய ஒரு சிறு பயம் அவ்வப்பொழுது எட்டிப்பார்த்தது. ஆனால் அந்த பயமோ ஒரு சலனமோ எதுவும் இன்றி மிகவும் பக்தியோடும், கோவில் இப்படி உள்ளது பற்றி சிறு வேதனையோடும், கோவிலுக்கு தற்பொழுது நடைபெறும் புனரமைப்பு வேலைகள் பற்றி பெருமையாகவும், ஒரு ஆசையோடும் அந்த அர்ச்சகர் எங்களுடன் பேசிக்கொண்டு இருந்தார். நாங்கள் சென்ற சமயத்தில் ரூ.10 லட்சம் வரை புதுப்பிப்பு வேலைகளுக்காக செலவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் பார்த்த அர்ச்சகர் போன்றே இவரது முகத்திலும் ஒரு ஆர்வம, ஒரு பக்தி, ஒரு அமைதி, ஒரு பெருமை, சேவை செய்யும் மனப்பாண்மை என அனைத்தையும் பார்க்க முடிந்தது. நான் சந்தித்த பிரபலமான கோவில்களின் அர்ச்சகர்கள் வங்கி காசாளர்கள் (Cashiers) போலவும், கோவிலை ஒரு தொழில் செய்யும் இடமாக (Business Centers)  மாற்றியது போல இல்லாமல் இவ்வளவு பக்திமயமாக இருந்தது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அப்பேற்பட்ட தெய்வ குழந்தைகளுக்காக எனது இந்த இரண்டாவது சமர்ப்பணம்.

கல்வெட்டு  ஆர்வலர்களுக்கு அந்த ஊரில் இந்த கல்வெட்டு பற்றிய தகவல் அறிய 
http://tamilartsacademy.com/books/tavam/chapter17.xml

டிஸ்கி: விகடன் மொழியில் கூறுவது என்றால் மேலே கூறிய எனது ஷொட்டு (பேஷ் பேஷ்) அந்த தெய்வ குழந்தைகளுக்கு என்றால் எனது குட்டு கடவுள் என்று கூறிக்கொள்ளும் சில (அயோக்கிய) “ஆனந்தா”க்களிடம் காசை கொட்டும் முட்டாள்களுக்கு.

குடவாசல் ஸ்ரீநிவாச பெருமாள்

பொங்கல் விடுப்பில் நான் ஊரில் இருந்த சமயம் எனது குடும்பத்துடன் எங்கள் நட்பு வட்டம் சூழ கும்பகோணம் சுற்றி உள்ள கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த நட்பு வட்டம் ஒவ்வொரு வருடமும் தை அமாவாசை அன்று இது போல் செல்வது வழக்கம். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பார்த்திராத கோவில்கள் என்று செல்வார்கள். இந்த முறை அப்படி செல்லுகையில் மிகவும் ஆச்சிர்யமான பல கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கோவில்களுக்கு என்று தல புராணம் என்று அக்கோவில் அமைந்த விதம் பற்றி கதை கூறுவது உண்டு. அப்படி ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒரு தல புராணம் இருந்தாலும் பெரும்பான்மையான கோவில்களின் அமைப்பு அல்லது வாசல் ஒன்று போல இருக்கும். பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது.
ஆனால் அன்று சென்ற எட்டு கோவில்களில் ஒரு கோவில் மற்ற கோவில்களில் இருந்து அமைப்பில் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. அந்த கோவில் கும்பகோணம் அருகே குடவாசல் என்ற ஊரில் இருந்த ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் ஆகும். இதன் சிறப்பு என்ன என்றால் அந்த கோவிலில் எம்பெருமான் அந்த திருப்பதி வெங்கடாசலபதியின் இளைய சகோதரர் என்கிற சம்பரதாயதோடு திருப்பதியை பார்த்தவாறு வடக்கு நோக்கி வீற்றிருப்பார். இந்த பூலோகத்தில் எந்த ஒரு பெருமாள் கோவிலும் இப்படி வடக்கு திசை நோக்கி எம்பெருமான் காட்சி தரமாட்டார், இந்த ஒரு கோவிலை தவிர. நாங்கள் கோவில் மாலை 4 மணிக்கு திறப்பதற்கு முன்பே அங்கு சென்று சேர்ந்தோம். கோவிலை திறக்க வந்த அர்ச்சகர் எங்கள் கூட்டத்தை பார்த்து மகிழ்ந்து எங்களுக்கு மிகவும் பொறுமையாக இந்த கோவிலின் சிறப்பை கூறிக்கொண்டு இருந்தார். அப்படி அவர் கூறிய போது அவரின் அந்த முகத்தில் ஒரு பக்தி பரவசத்தை பார்க்க வேண்டுமே... ஆஹா என்ன ஒரு மகிழ்ச்சி, என்ன ஒரு களிப்பு. பக்தர்கள் சேவையை அந்த பெருமாளுக்கு செய்யும் சேவையை நினைக்கும் ஒரு சில அர்ச்சகார்களில் அவரும் ஒருவர் எனது மனதில் பட்டார். அப்படி பட்ட உண்மையான கடவுள் ஊழியர்களுக்காக இதுவும் எனது அடுத்த பதிவும் சமர்ப்பணம்.